குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெறாததற்கு காரணம் யார்? பா.ஜ.க. விளக்கம்


குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெறாததற்கு காரணம் யார்? பா.ஜ.க. விளக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2022 9:57 PM GMT (Updated: 2022-01-18T03:27:20+05:30)

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெறாததற்கு காரணம் யார்? என்பதற்கு பா.ஜ.க. விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெறாத விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நமக்கும் தமிழக ஊர்தி இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோது ‘தமிழக அரசே' முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியை தருகிறது.

ஒவ்வொரு வருடமும் அனைத்து மாநிலங்களும் இந்த பேரணியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கும், அதற்கான திட்டங்களை மேற்கொள்ளும். ஊர்திகளை வடிவமைக்கும். பாதுகாப்பு துறை அமைச்சகம், பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளில் சிறப்பான சிலவற்றை தேர்ந்தெடுத்து ஊர்வலத்தில் பங்கு பெற செய்யும். இது தான் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை உள்ள நடை முறை. இதற்கு முன்னர் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கூட குடியரசு தின பேரணியில் தமிழக ஊர்திகள் இடம்பெறாது இருந்தது உண்டு. பாதுகாப்பு துறை அமைச்சகமானது, பல்வேறு துறைகளின் நிபுணர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் ஊர்திகளை தேர்ந்தெடுக்கும். இந்த குழுவில் கலை, கலாசாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனக்கலை ஆகிய துறைகளின் நிபுணர்கள் இடம்பெறுவார்கள்.

தமிழகம் தவறிவிட்டது

இந்த குழுவானது முதலில் வடிவமைப்பை ஆய்வு செய்து அதில் திருத்தங்களை செய்து மாற்றங்கள் தேவையெனில் ஆலோசிக்கப்படும். அந்த வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அம்மாநில அதிகாரிகள் முப்பரிமாணத்தில் தங்களின் மாதிரியை விளக்குவார்கள். மீண்டும் அந்த குழு ஆய்வு செய்து இறுதி தேர்வுக்கு முன்னெடுத்து செல்லும். அழகான ஒளி தோற்றம், மக்கள் மனதில் பதிவது போன்ற காட்சியமைப்பு, வடிவமைப்பின் எண்ண ஓட்டம், அதனுடன் உள்ள இசை ஆகிய பல்வேறு காரணிகளோடு, இவைகளின் முழு விவரங்களையும் விரிவாக விளக்கமளித்த பின் இறுதி தேர்வு செய்யப்படும்.

ஆக, எந்த மாநிலங்கள் சிறப்பான தயாரிப்பை வடிவமைத்து முன்வைத்ததோ, அந்த மாநிலங்கள் அந்த வருட அணிவகுப்பில் தேர்வு பெற்று இடம்பெறும் என்பதே நடைமுறை. அதனடிப்படையில் இந்த வருடம் தமிழகம் சரியான முறையில் நம் மாநில ஊர்திகளை காட்சிப்படுத்த தவறிவிட்டது என்பதே கண்கூடு.

மலிவு அரசியல்

ஆனால், இந்த நடைமுறை தெரியாமல் வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று மீண்டும் மீண்டும் மலிவு அரசியலை செய்வது அழகல்ல.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story