திருச்சி நவலூர் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்; மாடு முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி


திருச்சி நவலூர் ஜல்லிக்கட்டு  சீறிப்பாய்ந்த காளைகள்; மாடு முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 18 Jan 2022 11:31 AM GMT (Updated: 18 Jan 2022 11:42 AM GMT)

திருச்சி நவலூர் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்; மாடு முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலியானார்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு திருவிழா நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்10.10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கியது.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா, ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பட்டையதாரர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி அனைத்து கிராம மக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். 

ஜல்லிக்கட்டு போட்டியில் 510 காளைகளும், 380 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சுழற்சி முறையில் முதலில் 150 வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். பின்னர் மதியம் 12.45 மணிக்கு பிறகு 150 பேர், மதியம் 2.45 மணிக்கு பிறகு 80 பேர் என 3 பிரிவாக மொத்தம் 380 வீரர்கள் களம் இறங்கினர். 

அதன்பிறகு வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்தது. ஆக்ரோஷமாக வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். 

வாடிவாசல் வழியாக வந்த காளைகளின் உரிமையாளர்கள் பெயர், அந்த காளையை அடக்கினால் எவ்வளவு பரிசு என்ற விபரம் ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காளைகளின் திமில்கள் வீரர்கள் பிடியில் சிக்கியது. ஆனால் சில காளைகள் திமிரி எழுந்து யாருடைய கைகளிலும் அகப்படாமல் சீறிப்பாய்ந்து சென்றது. போட்டி தொடங்கிய 10 நிமிடங்களிலேயே மாடுபிடி வீரர் ஒருவர் மாட்டின் கொம்பு கிழித்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 5 ஆம்புலன்ஸ்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தன. மருத்துவ குழுவை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் உள்பட 64 பேர் மருந்து மற்றும் உபகரணங்களுடன் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளி காசு, மிக்ஸி, கட்டில், பீரோ, நாற்காலி, டேபிள், கைக்கடிகாரம், சைக்கிள், மின்விசிறி, செல்போன், பணம் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று வாடி வாசலை கடந்து சென்றது அப்போது காளைகள் வெளியே செல்லும் (கலெக்சன் பாயிண்ட்)என்ற இடத்தில் பார்வையாளராக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் பாரதி நகரைச் சேர்ந்த வினோத்குமார்(வயது 24) என்ற வாலிபரை மாடு முட்டியது. இதில் அவருக்கு வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 21 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 13 பேரும், பார்வையாளர்கள் 10 பேரும், போலீஸ்காரர் ஒருவர் என 45 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலை 4.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

Next Story