மழை வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு


மழை வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு
x
தினத்தந்தி 21 Jan 2022 12:02 PM GMT (Updated: 21 Jan 2022 12:02 PM GMT)

வேடசந்தூர் அருகே மழை வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடந்தது.

வினோத வழிபாடு

வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் தை பூசத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக அமைதி, மழை வேண்டி மற்றும் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடந்தது.

அதன்படி கடந்த 11-ந்தேதி நிலா பெண்ணை தேர்வு செய்வதற்கு வழக்கமாக நடைபெறும் சடங்குகள் தொடங்கின. இதற்காக ஊரில் உள்ள சிறுமிகள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் மாசடச்சியம்மன் கோவிலுக்கு பால் கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து 7 நாட்கள், தங்களது வீடுகளில் இருந்து சிறுமிகள் பலவகை சாதம் தயார் செய்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் அந்த சாதத்தை ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து விளக்கேற்றி சிறுமிகள் வழிபாடு செய்தனர்.



நிலா பெண் தேர்வு

பின்னர் அந்த சாதத்தை சிறுமிகள் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர். இந்த வினோத வழிபாட்டின் 8-வது நாள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்வது வழக்கம். அந்த பெண் 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக இருப்பார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 8-வது நாள் வழிபாட்டில் தூங்காமல் இருந்த அந்த கிராமத்தை சேர்ந்த விசுவநாதன்- விசாலாட்சி தம்பதியின் மகள் பிரதிக்‌ஷா (வயது 11) என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டாள். அவள் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சிறுமிக்கு வரவேற்பு

இதைத்தொடர்ந்து நிலா பெண்ணாக தேர்வு செய்த பிரதிக்‌ஷாவை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை அமர வைத்து ஆவாரம் பூக்களை பறித்து வந்தனர். அந்த பூக்களை மாலையாக தொடுத்து நிலா ெபண்ணான சிறுமிக்கு அணிவித்தனர். சிறுமியின் தலை, கைகளிலும் ஆவாரம் பூவை சூட்டி அலங்கரித்தனர். பின்னர் ஒரு கூடையில் ஆவாரம் பூக்களை நிரப்பி அதனை சிறுமியின் தலை மீது வைத்தனர். அந்த கூடையை சுமந்தபடி சிறுமி ஊர்வலமாக கோட்டூருக்கு அழைத்து வரப்பட்டாள்.

ஊர் மக்கள் சார்பில் முக்கியஸ்தர் ஜெயக்குமார் தலைமையில் தாரை, தப்பட்டை முழங்க சிறுமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று தோழிகளுடன் நிலா பெண்ணான சிறுமியை அமர வைத்தனர். அங்கு கும்மி அடித்து ஆண்கள், பெண்கள் பாட்டுப்பாடி சிறுமியை சுற்றி வந்தனர். பின்னர் மாசடச்சியம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியின் முறை மாமன்கள் சேர்ந்து பச்சை தென்னை மட்டையால் குடிசை அமைத்தனர். அங்கு சிறுமியை அமர வைத்து சடங்குகள் செய்தனர்.

விளக்கேற்றி வழிபாடு

அதைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். குடிசையில் இருந்த சிறுமியை வெளியே அழைத்து வந்தனர். அங்கு கோவில் முன்பு மாவிளக்கு வைத்து, அதன் நடுவே சிறுமியை அமர வைத்து சுற்றி வந்து பெண்கள் பாட்டுப்பாடி கும்மி அடித்தனர். நேற்று அதிகாலையில் கிராம மக்கள் சிறுமியை, அழைத்துக்கொண்டு ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றுக்கு சென்றனர்.

அந்த கிணற்றுக்குள் படிகள் வழியாக சிறுமியுடன் இறங்கினர். அங்கு கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டனர். அவை பந்துபோல மிதந்தது. அதன் மீது மண் கலயத்தை வைத்து எண்ணெய் ஊற்றி திரி வைத்து நிலாப்பெண்ணான சிறுமி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தவுடன், கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு 7 நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத வழிபாட்டை கோட்டூர் கிராம மக்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story