பா.ஜ.க. ஆட்சியில் வறுமை கோட்டிற்கு கீழே சென்ற 23 கோடி மக்கள்; காங்கிரஸ் அறிக்கை


பா.ஜ.க. ஆட்சியில் வறுமை கோட்டிற்கு கீழே சென்ற 23 கோடி மக்கள்; காங்கிரஸ் அறிக்கை
x
தினத்தந்தி 21 Jan 2022 3:56 PM GMT (Updated: 21 Jan 2022 3:56 PM GMT)

பா.ஜ.க. ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

சென்னை,



தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் கோடி டாலர் அதாவது, ரூபாய் 375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை பிரதமர் மோடி உறுதியோடு கூறி வருகிறார். இதன்மூலம் தற்போதுள்ள 2.6 டிரில்லியன் கோடி டாலர் அதாவது, ரூபாய் 193 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று நம்பிக்கை வெளிப்படுத்தினார். ஆனால், இந்த இலக்கை அடைய இந்தியாவின் வளர்ச்சி இன்றைய நிலையிலிருந்து இருமடங்காக உயர வேண்டும். ஆனால், ஏழு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்தித்து வருகிறது.

கடந்த ஜனவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நாட்டில் நிலவுகிற வறுமை சாவுகள் குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம், 'இந்தியாவில் சமீபகாலத்தில் பட்டினி சாவுகள் ஒன்றுகூட இல்லை. கொரோனா தொற்று காலத்தில் கூட அத்தகைய நிலை ஏற்படவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 'இந்த கருத்தை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் ? ஏதாவது ஆய்வுகள் மேற்கொண்டீர்களா ? ஏதாவது புள்ளி விவரம் உங்களிடம் இருக்கிறதா?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் கூற முடியாத மத்திய அரசு வழக்கறிஞரிடம், இன்னும் இரு வாரங்களில் இதுகுறித்து புள்ளி விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. நாட்டில் நிலவுகிற கடுமையான வறுமையையும், பட்டினியையும் உச்ச நீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்காக செயல்பட்டு வருகிற ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையின்படி, 20 கோடி இந்தியர்களுக்கு மேலாக நாள்தோறும் பசியோடு வெறும் வயிற்றுடன் உறங்குகிறார்கள் என்று கூறியதோடு, பட்டினியால் நாடு முழுவதும் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பசி, பட்டினியால் இறப்பது பற்றிய புள்ளி விவரங்கள் மறைக்கப்படுகின்றன. உலக நாடுகளுடைய கணிப்பின்படி இந்தியாவில் பசி, பட்டினியோடு மக்கள் வாழ்கிறார்கள் என்ற பல புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன. 2020 அக்டோபரில் வெளியிடப்பட்ட உலக வறுமை குறியீடு மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 2017-18ல் மட்டும் 14 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன்படி ஒருநாளைக்கு 35 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய கணக்கீட்டின்படி 2.1 கோடி மாத சம்பளம் வாங்கும் அமைப்பு சார்ந்த பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். அசிம் பிரேம்ஜி பல்கலை கழக ஆய்வின்படி கிராமப்புறத்தில் 57 சதவிகிதம், நகர்ப்புறத்தில் 87 சதவிகித தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளனர்.

இதன்படி இந்திய மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவரும், உலக மக்கள் தொகையில் மூன்று சதவிகிதமும் இந்தியாவில் வறுமையில் இருப்பதாக வலுவான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் 13 கோடி இந்தியர்களின் குறைந்தபட்ச வருமானம் ஒருநாளைக்கு ரூபாய் 150-க்கும் கீழே சென்றுள்ளது. வரலாறு காணாத வகையில் பொருளாதார பேரழிவை மக்கள் சந்தித்து வருகிறார்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, நாட்டு மக்களிடையே இருக்கிற வேலையில்லா திண்டாட்டம், வேலை வாய்ப்பிழப்பு, உற்பத்தி குறைவு, வளர்ச்சியில் பின்னடைவு ஆகியவற்றை மூடிமறைத்து விட்டு மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய மக்கள் பசி, பட்டினியில் மடிந்து கொண்டிருக்கிற அதேநேரத்தில் பிரதமர் மோடியின் நண்பர்களான அம்பானி, அதானி சொத்துகள் பலமடங்கு கூடியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 4.91 பில்லியன் டாலராக (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 37 ஆயிரத்து 500 கோடி) இருந்தது. அது 20 மாதங்களில் 83.89 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 6 லட்சத்து 30 ஆயிரம் கோடி. இதன்படி அதானியின் சொத்து மதிப்பு 1800 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 250 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது.

1980 இல் சாதாரண வர்த்தகராக இருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி 2003ல் மோடியின் நட்பு ஏற்பட்டு ஆசியாவின் இரண்டாவது கோடீசுவரராக அம்பானியின் அடுத்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இவை அனைத்துமே பிரதமர் மோடியின் ஆசியோடும், ஆதரவோடும் நடைபெற்றதாகும்.

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழலே இல்லை என்று கூறுபவர்கள், அதானியின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னாலே பா.ஜ.க. அரசின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லை என்று எவராவது மறுக்க முடியுமா? இன்றைக்கு பா.ஜ.க. கட்சிக்கு பின்புல ஆதரவாக செயல்படுபவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி தான்.

எனவே, இந்தியாவை வல்லரசாக்குவேன், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் இந்தியாவில் பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. மோடியின் ஆட்சியில் ஒருபக்கம் வறுமையும், வருவாய் இழப்பிலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மறுபுறம் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானியும், அம்பானியும் போட்டி போட்டு கொண்டு சொத்துகளை குவித்து வருகிறார்கள். மோடியின் ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இத்தகைய மோடியின் ஆட்சிமுறைக்கு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story