மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்: ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி


மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்: ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி
x
தினத்தந்தி 21 Jan 2022 9:57 PM GMT (Updated: 21 Jan 2022 9:57 PM GMT)

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் சோதனையை மகேந்திரகிரியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்து உள்ளனர் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.

இதுதவிர நிலவு ஆய்வுக்காக சந்திரயான் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சூரியன் ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டமும் செயல்படுத்துவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இவற்றை தொடர்ந்து இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக ககன்யான் விண்கலத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜினை இஸ்ரோ கடந்த 12-ந்தேதி தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாகத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அனைத்து அம்சங்களையும் என்ஜினின் செயல்திறன் பூர்த்தி செய்துள்ளது.

விகாஸ் என்ஜின் சோதனை

தொடர்ந்து, ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ‘உயர் உந்துதல் விகாஸ் என்ஜினின்’, 25 வினாடிகள் தகுதிச் சோதனையை மகேந்திரகிரியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த விகாஸ் என்ஜினை பொறுத்தவரை 2 என்ஜின்கள் ஏற்கனவே 480 வினாடிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில், எரிபொருள்-ஆக்சிடைசர் விகிதம் மற்றும் அறை அழுத்தம், எந்திரத்தின் வலிமை சரிபார்க்கப்பட்டு உள்ளது. என்ஜினின் செயல்திறன் சோதனை நோக்கங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்து உள்ளது.

தொடர்ந்து மேலும் பல்வேறு இயக்க நிலைமைகளின் கீழ் 75 வினாடிகளுக்கு 3 சோதனைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளன. அதைத் தொடர்ந்து, ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் தகுதியை முடிக்க மற்றொரு உயர் உந்துதல் விகாஸ் எந்திரம் 240 வினாடிகளுக்கு நீண்ட கால சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

நம்பகத்தன்மை சோதனை

இந்த பரிசோதனைகளில் வெற்றி பெற்றது, ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லாகும். அந்தத் திட்டத்தின்படி, மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தில் இந்த என்ஜினை இணைப்பதற்கான நம்பகத்தன்மை சோதனை மூலம் உறுதியாகி உள்ளது.

வரும் 2023-ம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவைத் தொடர்ந்து 4-வது நாடாக இந்த திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்த உள்ளது.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Next Story