பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் போராடி அணைத்தனர்


பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரம் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 23 Jan 2022 8:15 PM GMT (Updated: 23 Jan 2022 8:15 PM GMT)

செங்குன்றம் அருகே பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் செல்லியம்மன் நகரில் தனியாருக்கு சொந்தமான பொம்மை குடோன் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த குடோனில், வெளிநாட்டில் இருந்து பொம்மைகளை வாங்கி வந்து இங்கு பார்சல் செய்து தமிழகம் முழுவதும் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த குடோனில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.

தீயை அணைத்தனர்

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மாதவரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு செங்குன்றம், மணலி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குடோனில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொம்மைகள் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் 8 மணி நேரம் போராடி நேற்று காலை 8 மணியளவில் தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொம்மைகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

தீ விபத்து குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story