சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலானது: ஊதியம் வழங்காததால் கல்வி அலுவலகத்தை சூறையாடிய ஆசிரியை


சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலானது: ஊதியம் வழங்காததால் கல்வி அலுவலகத்தை சூறையாடிய ஆசிரியை
x
தினத்தந்தி 23 Jan 2022 9:15 PM GMT (Updated: 23 Jan 2022 9:15 PM GMT)

ஊதியம் வழங்காததால் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலகத்தை சூறையாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர் தைலம்மை (வயது 47). இவர் மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என்றும், அதிகாரிகளுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை என்ற புகார் காரணமாக வட்டாரக்கல்வி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கடந்த சில மாதங்களாக இவருக்கு ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட்டார கல்வி அலுவலகம் சூறை

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை தைலம்மை, மணமேல்குடியிலுள்ள வட்டாரக்கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளார். மேலும் அங்கிருந்த ஆவணங்களை தூக்கியெறிந்து ரகளையில் ஈடுபட்டதுடன் அங்கு இருந்த அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வட்டார கல்வி அலுவலகத்தை ஆசிரியை சூறையாடிய சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை பணியிடை நீக்கம்

இந்தநிலையில் வட்டாரக்கல்வி அலுவலகத்திற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட ஆசிரியை தைலம்மையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Next Story