தமிழகத்தில் பாதிப்பு சற்றே குறைந்தது; 30,580 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் பாதிப்பு சற்றே குறைந்தது; 30,580 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jan 2022 11:12 PM GMT (Updated: 2022-01-24T04:42:44+05:30)

தமிழகத்தில் பாதிப்பு சற்றே குறைந்துள்ளது. 30 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 638 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17,324 ஆண்கள், 13,256 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 580 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று முன்தினத்தை விட பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,383 பேரும், செங்கல்பட்டில் 1,841 பேரும், கோவையில் 3,912 பேரும், கன்னியாகுமரியில் 1,248 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மயிலாடுதுறையில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேருக்கும், 12 வயதுக்கு உட்பட்ட 1,103 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4,661 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 33 ஆயிரத்து 990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 590 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 53 ஆயிரத்து 848 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 91 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 709 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 1,163 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

40 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 25 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 15 பேரும் என 40 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கடலூரில் 3 பேரும், தூத்துக்குடி, திருவள்ளூர், கன்னியாகுமரி, காஞ்சீபுரம், வேலூர், கோவையில் தலா 2 பேரும், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சியில் தலா ஒருவரும் என 14 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 24 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று உயிரிழப்பு 40-ஐ எட்டியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 218 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 24 ஆயிரத்து 283 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 7 ஆயிரத்து 853 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 168 பேரும், கோவையில் 1,957 பேரும் அடங்குவர். இதுவரையில் 28 லட்சத்து 95 ஆயிரத்து 818 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 954 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story