நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவு


நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவு
x
தினத்தந்தி 25 Jan 2022 9:41 PM GMT (Updated: 2022-01-26T03:11:01+05:30)

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கண்டன கருத்துகளை நீக்கி சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். அந்த காரை பதிவு செய்ய சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடப்பட்டது.

அதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் விஜய் வழக்கு தொடர்ந்தார். அதில், காருக்கு இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி என்று தனியாக விதிக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 8 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது.

நன்கொடை அல்ல

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘மனுவில் விஜய் நடிகர் என்பதை குறிப்பிடவில்லை. வரி என்பது அரசுக்கு முறையாக செலுத்தவேண்டிய தொகையாகும். அது ஒன்றும் அரசுக்கு செலுத்தும் நன்கொடை அல்ல. சமூக நீதிக்காக பாடுபடுவதுபோல் காட்டிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தேசத்துரோக செயல் ஆகும். நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது. அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை நடிகர்கள் முறையாக செலுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவு (அபராதம்) விதித்து உத்தரவிட்டார்.

தடை விதிப்பு

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி தலைமையிலான டிவிசன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சொகுசு காருக்கான நுழைவு வரி ரூ.32 லட்சத்து 30 ஆயிரத்தை செலுத்திவிட்டதாகவும், அதனால் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

உள்நோக்கம் இல்லை

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துகளை நீக்குகிறோம். வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விதிப்பது தொடர்பாக பல்வேறு ஐகோர்ட்டுகள் பலவிதமான தீர்ப்புகளை வழங்கின. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 9 நீதிபதிகள் கொண்ட முழு, மாநில அரசுக்கு இதுபோல நுழைவு வரி வசூலிக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

எனவே இந்த காலகட்டத்தில் மனுதாரர் விஜய் உள்நோக்கத்துடன் வரி செலுத்தாமல் செயல்பட்டார் என கூற முடியாது. அவருக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை.

பலம்

மேலும், நீதித்துறையின் உண்மையான பலம் என்பது மக்களின் நம்பிக்கையே தவிர, ஒருவரை தண்டிப்பது அல்ல. இந்த மேல்முறையீட்டு வழக்கை ஏற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story