புதுச்சேரி அருகே தனித்தனி சம்பவங்களில் கட்டிட தொழிலாளி முதியவர் அடித்துக் கொலை 3 பேர் கைது
புதுச்சேரி அருகே வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளி, முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். தனித்தனியதாக நடந்த இந்த சம்பவங்களில் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பாகூர்
புதுச்சேரி அருகே வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளி, முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். தனித்தனியதாக நடந்த இந்த சம்பவங்களில் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கல்லால் அடித்து கொலை
புதுச்சேரி அருகே கன்னியக்கோவில் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஓட்டல் முன்பு நேற்று இரவு படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அருகில் கிடந்த கல்லை எடுத்து திடீரென்று முதியவரை சரமாரியாக தாக்கினார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்தில் அவர்கள் பார்த்தபோது தலையில் ரத்த காயத்துடன் முதியவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. அதன் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயத்துடன் இருந்தார்.
அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் வார்க்கால்பட்டு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 50) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பிணமாக கிடந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கட்டிட தொழிலாளி
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அந்த பகுதியில் பழைய பேப்பர் சேகரித்து விற்பனை செய்து பிழைத்து வந்துள்ளார். அவர் பெயர், ஊர் பற்றிய விவரம் தெரியவில்லை. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளியை தேடி வந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கிருமாம்பாக்கம் அருகில் உள்ள நரம்பை சாராயக்கடை அருகே சுடுகாடு பாதையில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது இறந்தவரின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த முருகன் (வயது 55) என்பதும், சில மாதங்களாக கிருமாம்பாக்கம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
பணம் கொடுக்க மறுத்ததால்...
நேற்று முன்தினம் இரவு முருகன் நரம்பையில் உள்ள சாராயக்கடையில் சாராயம் வாங்கி, அருகில் உள்ள சுடுகாடு பகுதியில் வைத்து குடித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சாராயம் வாங்கி குடிக்க முருகனிடம் பணம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை அருகில் உள்ள வேப்பமர கிளையை உடைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலை, முகத்தில் படுகாயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே இறந்துள்ளார்.
அடுத்தடுத்து பரபரப்பு
ஒரே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவம் நடந்த நரம்பை மற்றும் முள்ளோடை பகுதிகளில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
அதன்பலனாககிருமாம்பாக்கத்தை சேர்ந்த அஜித், திவான் ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் தங்கள் நண்பர் 2 பேருடன் சேர்ந்து, முன்விரோதம் காரணமாக முருகனை அடித்துக் கொன்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அஜித், திவான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் ஒருவர் கைது
இதற்கிடையில் முள்ளோடை சாராயக்கடைக்கு செல்லும் சாலையில் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன், ஏட்டு மாட்டின் லூதர், போலீசார் கலைவாணன், கணபதி, அய்யனார், பிரியன், ஹரி, அம்பேத்கர் ஆகியோர் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கினார்.
இதில் ஒரு போலீஸ்காரருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் (52) என்பது தெரியவந்தது. மதுகுடிக்க பணம் கேட்டபோது தராததால் ஆத்திரமடைந்த அவர் ஓட்டல் முன் படுத்திருந்த முதியவரை அடித்து கொலை செய்ததும், அருகில் இருந்த ராமலிங்கத்தை தாக்கியதும் தெரியவந்தது.
கேரள மாநிலம் கண்ணூர் போலீசில் இதேபோன்று குடித்துவிட்டு கொலை செய்த வழக்கில் மணிகண்டன் 9 ஆண்டு சிறையில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு தான் விடுதலையானார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஒரே நாள் இரவில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருமாம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story