சென்னை தொழில் அதிபர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்: சி.பி.ஐ. கோர்ட்டில் விரைவில் விசாரணை


சென்னை தொழில் அதிபர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்: சி.பி.ஐ. கோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 6 May 2022 4:24 AM IST (Updated: 6 May 2022 4:24 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.564 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் சென்னை தொழில் அதிபர் மற்றும் 6 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை சென்னை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் வழக்கின் விசாரணை விரைவில் தொடங்க உள்ளது.

சென்னை,

சென்னையை சேர்ந்த கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (சி.இ.பி.எல்.) நிறுவனத்தின் இயக்குனர் அகமது ஏ.ஆர். புகாரி.

இவர், 6 நிலக்கரி இறக்குமதி நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்ததாகவும், இதன்மூலம் ரூ.564 கோடி முறைகேடு செய்திருப்பதும் சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அகமது ஏ.ஆர்.புகாரி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சுங்கவரி சட்டத்தின் கீழ் மத்திய வருவாய் புலனாய்வு இயக்ககம் அகமது புகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

சொத்துகள் முடக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தியது. விசாரணையில், இந்த மோசடி மூலம் அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் 6 நிறுவனங்கள் முறைகேடாக ரூ.564.48 கோடி முறைகேடாக பணம் சம்பாதித்து இருப்பதும், இந்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அகமது ஏ.ஆர்.புகாரிக்கு சொந்தமான நிறுவனங்களின் ரூ.564.48 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு அவற்றை அரசுடமையாக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்தநிலையில் அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் 6 நிறுவனங்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அமலாக்கத்துறை சென்னை சி.பி.ஐ. முதன்மை கோர்ட்டில் 80 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இதன் அடிப்படையில் சி.பி.ஐ. கோர்ட்டு விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது.

Next Story