இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனை முன்பு பா.ம.க. ஆர்ப்பாட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு...!


இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனை முன்பு பா.ம.க. ஆர்ப்பாட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு...!
x
தினத்தந்தி 9 May 2022 9:37 AM GMT (Updated: 2022-05-09T15:07:52+05:30)

இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனை முன்பு வரும் 11-ம் தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தில் அனைத்து வகையான பதிவேடுகளும் இனி இந்தி மொழியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று அதன் நிறுவனர் கடந்த 29-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கை இந்திய அலுவல் மொழிச் சட்டத்துக்கு எதிரானது ஆகும். இது அப்பட்டமாக இந்தித் திணிப்பு என்பதை பா.ம.க. ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்தியில் மட்டுமே பதிவேடுகள் என்ற சுற்றறிக்கை அங்கு பணியாற்றும் இந்தி பேசாத பணியாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவுக்கும் காரணமாக ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெறவேண்டும். பதிவேடுகளை பராமரிப்பதில் முன்பிருந்த நிலையே தொடரவேண்டும் என்று வலியுறுத்தி ஜிப்மர் மருத்துன நிறுவனம் முன் வரும் 11-ந்தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பா.ம.க.வின் புதுச்சேரி அமைப்பாளர் கணபதி தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து நிலை பா.ம.க.வினரும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 


Next Story