கணவன் இறந்த துக்கம்: மகன்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 மகன்களும் பரிதாப பலி..!


கணவன் இறந்த துக்கம்: மகன்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 மகன்களும் பரிதாப பலி..!
x
தினத்தந்தி 10 May 2022 2:55 AM GMT (Updated: 2022-05-10T08:25:53+05:30)

தஞ்சை அருகே தனது இரண்டு மகன்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில் இரண்டு மகன்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தாய் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(30). இவரது கணவர் விஜயகுமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறந்தார். கணவர் இறந்ததில் இருந்த சத்யா தனது மகன்களான நிதிஷ், முகேஷ் உடன் வசித்து வந்தார். 

கணவன் இறந்த துக்கத்தில் இருந்து மீளாத சத்யா தானும் சாக துணிந்தார். தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என்ற நிலையில் மனதை கல்லாக்கி கொண்டு விஷமருந்தை வாங்கி முதலில் தனது மூத்த மகன் முகேஷ் (7)க்கு கொடுத்துள்ளார். அடுத்து இளைய மகன் நிதிஷ் (5)க்கு கொடுத்துள்ளார். 

இருவருக்கும் கொடுத்துவிட்டு சத்யா விஷத்தை குடிக்கும் சமயத்தில் அங்கு வந்து அவரது உறவினர் ரெங்கசாமி விஷத்தை தட்டிவிட்டார். உடனே தாய் மற்றும் மகன்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் நிதிஷ்(5)உயிரிழந்தான். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மற்றொரு மகன் முகேஷ் (7) இன்று அதிகாலை உயிரிழந்தான். தாய் சத்யா, சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து ரெங்கசாமி (49) கொடுத்த புகாரின் பேரில் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்ததும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story