தொழிலாளர்கள் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சர் பேச்சு


தொழிலாளர்கள் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 11 May 2022 8:59 PM GMT (Updated: 11 May 2022 8:59 PM GMT)

தொழிலாளர்கள் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார்.

சென்னை,

தேசிய பாதுகாப்பு குழும விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

விழாவில், அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:-

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கண்களாக திகழும் தொழிலாளர்களது பாதுகாப்பு மற்றும் நலனை காப்பதற்கென பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தீட்டி, அதனை செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது இந்த அரசின் தலையாய கடமை என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வருகிறது.

விபத்து தவிர்க்கும் பயிற்சிகள்

அதிக அளவில் பட்டாசு தொழிற்சாலையின் தொழிலாளர்களின் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க, பாதுகாப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு, இந்த இயக்க அலுவலர்களால் பாதுகாப்பாக செயல்படும் வழிமுறைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தொழிற்சாலையில் தொழிலாளர்கள் விபத்து இன்றி பணிபுரிய தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சியும், விழிப்புணர்வும் வழங்க பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அரசின் அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

வாழ்த்து-பாராட்டு

அரசின் சிறப்பான திட்டங்களின் மூலம் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து தொழிலாளர்கள் செயல்பட வேண்டும். நிர்வாகத்தினரும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.

சோதனைகளையும், சவால்களையும் சந்திக்காமல் சாதனை எதுவும் நடத்த முடியாது என்பதை நன்கு உணர்ந்து வியர்வை நதியில் நீந்தி உழைப்பு முத்தெடுத்து தற்போது பல்வேறு விருதுகளை பெற்ற அனைத்து தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள். தங்களது திறமையை வெளிப்படுத்தி பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கே.ஜெகதீசன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குனர் எம்.வி.கார்த்திகேயன், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் துணைத்தலைவர் டி.பாஸ்கரன், கமிட்டி உறுப்பினர் கே.ஆர்.ரவிச்சந்திரன், செயலாளர் பி.ராஜ்மோகன், பொருளாளர் கே.ஜெகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story