இந்தி திணிப்பு விவகாரம்: கோவை பல்கலைக்கழக விழாவில் கவர்னர்-அமைச்சர் பேச்சால் பரபரப்பு


இந்தி திணிப்பு விவகாரம்: கோவை பல்கலைக்கழக விழாவில் கவர்னர்-அமைச்சர் பேச்சால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 May 2022 11:14 PM GMT (Updated: 13 May 2022 11:14 PM GMT)

இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக விழாவில் அமைச்சர்-கவர்னர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடந்தது.

பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார்.

விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

இந்தி திணிப்பு

விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்தி திணிப்பு விவகாரம் பற்றி பேசினார்.

அமைச்சரின் பேச்சுக்கு விழா மேடையிலேயே கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழாவில், அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:-

திராவிட மாடல்

விழாவில் மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 569 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 251 பேர் பெண்கள் ஆவார்கள். தற்போது தமிழகத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் உயர் கல்வி படித்து வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல்.

தமிழகம் இந்திய அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. நாட்டில் உயர் கல்வி பயில்வதில் தமிழகம் 53 சதவீதமாக இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தனது இரு கண்களாக கருதுகிறார். கல்வித்துறை, தொழில்துறை மற்றும் தொழிலாளர்துறை ஆகியவை சார்பில் மாணவர்கள் படிக்கும்போதே தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியை திணிக்கக்கூடாது

இந்த மேடையில் வைத்து கவர்னருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்திக்கும் எதிரானவர்கள் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் இந்தியை படிக்கட்டும், அதில் தவறு இல்லை. அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியை மாற்று மொழியாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதை எக்காரணத்தைக்கொண்டும் கட்டாயமாக்கி திணிக்கக்கூடாது.

தமிழகத்தில் தாய்மொழியான தமிழ், உலகளாவிய அளவில் இருக்கும் ஆங்கிலம் ஆகிய இருமொழி பயன்பாட்டில் இருக்கிறது. இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று பலர் கூறினார்கள். ஆனால் இந்தி படித்தால் வேலை கிடைக்கிறதா? இல்லையே. இந்தி படித்தவர்கள் இங்கு பானிபூரிதானே விற்பனை செய்கிறார்கள்.

இருமொழி கொள்கைதான்

நாங்கள் உலகளாவிய அளவில் உள்ள ஆங்கில மொழியை படித்து வருகிறோம். பின்னர் எதற்கு எங்களுக்கு மாற்று மொழி?. எங்களுக்கு எங்களின் தாய்மொழியான தமிழும், மற்றொரு மொழியான ஆங்கிலமும் போதும். தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கைதான் கடைபிடிக்கப்படும். மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதை எங்கள் தாய்மொழியில்தான் பின்பற்றுவோம்.

தமிழக முதல்-அமைச்சர் மாணவர்களுக்காக தமிழ்நாடு கல்வி கொள்கை குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்த குழுவின் அடிப்படையில் கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும். கவர்னரிடம் எங்கள் உணர்வை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். அதை அவர் புரிந்து கொண்டு மத்திய அரசிடம் எங்களின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.

தயாராக உள்ளனர்

தமிழக மாணவர்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். இந்தி மாற்றுமொழிதான். அதை கட்டாயமாக்கக்கூடாது. மாணவர்கள் 3-வது மொழியாக என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். இதுதான் தமிழக கல்வி கொள்கை குழு மூலம் செயல்படுத்தப்படும். பெண்கள் உயர் கல்வியில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில் சிறந்த மாணவர்களை உருவாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பட்டம் பெற்றவர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக்கூடாது. வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து புதிய வாழ்க்கையில் நீங்கள் நுழைய போகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இங்கு இருக்கும் இஸ்ரோ முன்னாள் தலைவர் பேசும்போது, மாணவர்கள் ஒவ்வொருவரும் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும் என்று கூறினார். அதுபோன்று நீங்களும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தரமான மருத்துவம்

நமது நாடு புதிய நம்பிக்கையுடன் பயணித்துக்கொண்டு இருக்கிறது. பல்வேறு இனம், மொழி, கலாசாரம் கொண்டதாக இருக்கும் நமது நாடு அனைத்து துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. புதிய யுக்திகளை செயல்படுத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைவரும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக தரமான மருத்துவம் வழங்கப்பட்டு பொதுமக்களின் உடல்நிலையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு டாக்டர்களின் எண்ணிக்கை, ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியை திணிக்கவில்லை

மேலும் மத்திய அரசு ஒரு மொழியை (இந்தி) திணிக்க முயல்வதாக பேசப்பட்டு வருகிறது. அப்படி அல்ல. மத்திய அரசு ஒருபோதும் இந்தியை திணிக்கவில்லை. புதிய கல்வி கொள்கையில் அந்தந்த மாநிலங்களின் மொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில மொழியில்தான் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புகூட நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆகியோர் மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் அந்தந்த மாநில மொழிகளில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர். தமிழகம் சுகாதாரம், தொழில், கல்வி உள்பட அனைத்து துறையிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

மாநில பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதும் கூட. பிரதமர் மோடி கூட பனாரஸ் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைத்துள்ளார். இதுதவிர ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு வருகிறது.

ஏன் அதை நமது நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தமிழை பற்றி தெரிந்து கொள்வார்கள். எனவே அதை தமிழக அரசு செய்ய வேண்டும். அதுபோன்று புதிய கல்வி கொள்கையில் பிற மாநிலங்களில் தமிழ்மொழி 3-வது மொழியாக சேர்க்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story