அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது- ஐகோர்ட்டு தீர்ப்பு


அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது- ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 May 2022 11:10 PM GMT (Updated: 14 May 2022 11:10 PM GMT)

பொதுமக்களுக்கு பயன்தரும் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பயிற்சி நிறுவனம்

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் வரையிலான பணிகளுக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் அமைக்க அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4.33 ஏக்கர் நிலமும், 61 கோடியே 80 லட்சம் ரூபாயையும் அரசு ஒதுக்கியது.

இந்த நிலையில், இந்த திட்டத்தை கூட்டுறவுத்துறை திடீரென நிறுத்தியது. இதற்கு பதில், திண்டுக்கல் மாவட்டம் மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைக்க முடிவு செய்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசு உத்தரவிட்டது.

வழக்கு தாக்கல்

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சென்றாயன் உள்பட இருவர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தலையிட முடியாது

மாநில அளவில் ஏற்கனவே 2 பயிற்சி நிலையங்கள் உள்ளபோது, மேலும் ஒரு பயிற்சி நிலையம் செம்மடுவு கிராமத்தில் கட்டத் தேவையில்லை என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை எதிர்க்க முடியாது. ஒரு அரசு எடுத்த ஒரு கொள்கை முடிவை, அடுத்து வரும் அரசு அதை மறு ஆய்வு செய்ய முடியும். அதற்கு அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது.

பொதுமக்களுக்கு பயன்தரும் கொள்கை முடிவில் ஐகோர்ட்டு தலையிட முடியாது.

சட்டசபை வளாகம்

கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசு ஒருங்கிணைந்த சட்டசபை வளாகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு வந்த அரசு, அரசினர் தோட்டத்தில் இருந்த சட்டசபையை ஜார்ஜ் கோட்டைக்கு மீண்டும் மாற்றி கொள்கை முடிவு எடுத்தது. இதை இந்த ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கிலும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசு எடுத்த கொள்கை முடிவை, முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ரத்து செய்துவிட்டு, தேசிய அளவிலான பயிற்சி நிலையத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசு முடிவு

மேலும், செம்மடுவு கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அப்பகுதி மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அங்கு தொடங்கப்பட்ட பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை அதிகம் இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே, அரசின் தொகை வீணாகிவிட்டது என்று கூற முடியாது.

ஒரு அரசு எடுக்கும் முடிவு மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன்தரும் வகையில் இருந்தால் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு அந்த திட்டம் பாதியில் இருந்தாலும் அதற்கான நிதியை வழங்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முந்தைய அரசின் திட்டத்தை அடுத்து வரும் அரசு நிறுத்தி, நிதியை வீணாக்கிவிடக்கூடாது. அதேநேரம், இந்த வழக்கில் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ததாக கூறமுடியாது. பயிற்சி மையம் எங்கு அமைக்க வேண்டும்? என்பதை ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

தள்ளுபடி

மது விலக்கு மட்டுமல்லாமல், மது விற்பனை விஷயத்திலும் ஏற்கனவே உள்ள அரசின் கொள்கை முடிவுகளைத்தான் அடுத்து வந்த அரசுகளும் கடந்த 50 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றன. அரசின் வருவாய் ஆதாரத்திற்காக இதுபோன்ற கொள்கை முடிவு எடுக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story