கடற்கரை-தாம்பரம் இடையே முன்னறிவிப்பு இல்லாமல் 22 மின்சார ரெயில்கள் ரத்து


கடற்கரை-தாம்பரம் இடையே முன்னறிவிப்பு இல்லாமல் 22 மின்சார ரெயில்கள் ரத்து
x

கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் 22 மின்சார ரெயில்கள் ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை,

சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரெயில் சேவை. குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை கொடுப்பதால், அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது.

அந்த வகையில், மின்சார ரெயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்கெட்-அரக்கோணம், மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடங்களில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடற்கரை-வேளச்சேரி இடையிலான பறக்கும் ரெயில் சேவையில் 4-வது வழித்தட பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வரையில் மட்டுமே தற்போது ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

இதேபோல் கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் இரவில் இயக்கப்பட்டு வந்த இரவு நேர ரெயில்களும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

22 மின்சார ரெயில்கள் திடீர் ரத்து

பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மின்சார ரெயில்களின் சேவை மாற்றியமைக்கப்படும். குறிப்பாக, நேர மாற்றம், கூடுதல் ரெயில் சேவை போன்றவை இதில் முக்கிய இடம்பெறும். இதேபோல, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்யப்படும். இதுகுறித்து முன்னறிவிப்பு ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிடும்.

ஆனால், நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடற்கரை-தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 22 மின்சார ரெயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக, நேற்று காலை 10.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை முன்னறிவிப்பு இல்லாமல் ரெயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.

பயணிகள் அவதி

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெரினா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல பிற்பகலில் ஏராளமானோர் ரெயில் நிலையங்களில் திரண்டனர். இதனால் தாம்பரம், பல்லாவரம், கிண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரமாகியும் ரெயில்கள் வராததால் பஸ் நிலையங்களுக்கு பயணிகள் படையெடுத்தனர்.

இதனால், தாம்பரம், கிண்டி பஸ் நிலையங்களில் நேற்று வழக்கத்தைவிட பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு பயணிகள் ஏறினர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மிகவும் அவதி அடைந்தார்கள். கை குழந்தைகளுடன் பெண்கள் அலைமோதினார்கள்.

கூட்டம் அலைமோதியது

மின்சார ரெயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. விமானநிலையம் உள்ளிட்ட சில இடங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட கியூ காணப்பட்டது.

தாம்பரம் பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத் தும் பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சில ரெயில் நிலையங்களில் ரெயில் சேவை ரத்து குறித்து பயணிகள் கேட்ட பின்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே, பல்லாவரம்-தாம்பரம் இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது குறித்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டது. பிற்பகல் 3 மணிக்குப்பிறகு கால அட்டவணையின்படி, ரெயில்கள் இயங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரெயிலில் மூச்சு கூட விட முடியாத அளவிற்கு கூட்ட நெரிசலில் இருந்தது. இதனால், குடும்பத்துடன் சென்றவர்கள் பாதியிலேயே இறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் இரவு 12 மணிக்கு இயக்கப்படும் ரெயில்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் வேலை முடிந்து நள்ளிரவு வீடு திரும்புவோர் அவதிக்குள்ளாகி உள்னர். இந்த நிலையில், முன்னறிவிப்பு இல்லாமல் ரெயில் சேவையை ரத்து செய்தது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பராமரிப்பு பணிகள் தொடர்பாக ரெயில்வே முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story