விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலை மாறி, தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுமார் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பை இந்த 22 மாத கால ஆட்சியில் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், அதன் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத அளவில்தான் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழக மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி, சீரான மின் வினியோகத்தையும் தராமல், விவசாயிகளுக்கு விளையாட்டு காட்டுகிறது தி.மு.க. அரசு. 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வரும்போதே விவசாயப் பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கும் விவசாயிகள், தற்போதைய இந்த ஆட்சியாளர்களின் தாந்தோன்றித்தனமான நடவடிக்கையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பாதிக்கும்

ஓரிரு நாட்களுக்கு முன்பு தி.மு.க. அரசு, தமிழ்நாட்டை டெல்டா மாவட்டங்கள் என்றும், டெல்டா அல்லாத மாவட்டங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து, காலையில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என்று ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க உத்தேசித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இது போன்று பிரித்து, இடைவெளிவிட்டு விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் போக்கு வேளாண் தொழிலை கடுமையாக பாதித்துவிடும். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது மட்டுமல்லாமல், விவசாயப் பணிகள் தடைபட்டு, சீர்குலைந்து போகும்.

மும்முனை மின்சாரம்

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்ற உயரிய லட்சியத்தோடு வாழும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல், போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வேளாண் தொழில் மென்மேலும் சிறந்தோங்கும் வகையில், 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story