கச்சநத்தத்தில் 3 பேர் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை


கச்சநத்தத்தில் 3 பேர் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை
x

கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம்.

இங்கு கோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான தகராறில் இரு சமூகத்தினர் இடையே முன் விரோதம் இருந்தது.

3 பேர் படுகொலை

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி இரவு அந்த கிராமத்துக்குள் புகுந்த கும்பல், ஆறுமுகம் (வயது 65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேரை படுகொலை செய்தது.

மேலும் கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த சுகுமாரன் (28), மலைச்சாமி (55), தனசேகரன் (34), மகேசுவரன் (23), தெய்வேந்திரன் (51) ஆகிய5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் தனசேகரன் சம்பவம் நடைபெற்று 1½ ஆண்டு கழித்து இறந்து போனார்.

வழக்கு

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சுள்ளான் கருப்பையா (31) தலைமறைவாக இருந்து வருவதால், மற்ற 32 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்தபோது 2 பேர் இறந்துவிட்டனர்,

கைதானவர்களில் 3 பேர் சிறுவர்களாக இருந்ததால் அவர்கள் மீது சிறுவர் நீதி குழுமத்தில் தனியாக வழக்கு தொடரப்பட்டது.

மீதமுள்ள 27 பேர் மீது சிவகங்கையில் உள்ள தீண்டாமை ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

27 பேரும் குற்றவாளிகள்

இந்த வழக்கிற்கு மதுரையை சேர்ந்த வக்கீல் சின்னராஜா, சிறப்பு அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த 1-ந் தேதி அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி முத்துக்குமரன் பரபரப்பு தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை முதலில் 3-ந் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

இதையொட்டி கச்சநத்தம், ஆவாரங்காடு கிராமங்களிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கண்காணிப்பின்கீழ் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதே போல் சிவகங்கை கோர்ட்டு வளாகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகளில் 3 பெண்கள் உள்பட 26 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். திருச்சி சிறையில் இருந்த முகிலன் என்பவர் மட்டும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தண்டனை விவரம்

இதனை தொடர்ந்து நீதிபதி முத்துக்குமரன், தண்டனை விவரத்தை வாசித்தார். அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சுமன் (28), இவருடைய தம்பி அருண் என்ற அருண்குமார் (26), இவர்களின் தந்தை சந்திரகுமார் (52), அக்னி என்ற அக்னி ராஜ் (25), ராஜேஷ் என்ற ராஜேசுவரன் (27), இளையராஜா (28), கனித் என்ற கனித் குமார் (24), கருப்பு ராஜா என்ற முனியாண்டிசாமி (34), மைக்கேல் முனியாண்டி (35), ஒட்டகுளத்தான் என்ற முனியாண்டி (45), ராமகிருஷ்ணன் (24), சந்திரகுமார் மனைவி மீனாட்சி (45), சரவணமுருகன் மனைவி செல்வி (42), கருப்பையா (34), சுரேஷ்குமார் (44), சின்னு (72), இவருடைய மனைவி செல்லம்மாள் (70), முத்தையா (65), முத்துச்செல்வம் (25), முத்தீஸ்வரன் (30), ராமச்சந்திரன் (43), மாயசாமி (36), முகிலன் (28), ரவி (39), அருள் நவீன் (24), கார்த்திக் (24), மட்டிவாயன் (26) ஆகிய 27 பேர் மீதும் மொத்தம் 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை

* இந்திய தண்டனை சட்டம் 120-பி (கூட்டுச்சதியில் ஈடுபடுதல்) பிரிவின்கீழ் தலா ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

* சட்டப்பிரிவு 302-ன் கீழ் (கொலை குற்றம்) 3 பேர் கொலைக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

* தீண்டாமை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேற்கண்ட தலா 7 ஆயுள் தண்டனைகளும் 27 குற்றவாளிகளுக்கும் பொருந்தும்.

ஏக காலத்தில்...

* மேலும், சட்டப்பிரிவு-148 (கொலை செய்யும் நோக்கத்தில் ஆயுதங்களை பயன்படுத்துதல்), 324 (ஆயுதங்களால் கொடூரமாக தாக்குதல்), 149 (கலகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் கும்பலாக கூடுதல்), 452 (வீடு புகுந்து தாக்குதல்), 294 (பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசுதல்) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்த வழக்குகளுக்கு சேர்த்து தலா 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

* அனைத்து குற்றங்களுக்கும் சேர்த்து ஒவ்வொருவரும் தலா ரூ.49 ஆயிரத்து 200 அபராதம் செலுத்த வேண்டும். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் சில மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் குற்றவாளிகள் அனுபவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

கச்சநத்தம் வழக்கில் தலா 7 ஆயுள் ஆண்டனை மற்றும் 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதால், ஒரு ஆயுள் தண்டனையாகத்தான் கருதப்படும்.


Next Story