காலை உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம்
கொல்லிமலை அருகே அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேந்தமங்கலம்
காலை உணவு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் எடப்புளிநாடு ஊராட்சியில் உள்ளது செங்கரை கிராமம். அங்கு ஏகலைவா அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளன. இந்த பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அந்த பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 27 பேர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதைக்கண்ட பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு அங்குள்ள பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திரண்டு பள்ளி வளாகத்திற்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது சமையல் செய்பவரை உடனே மாற்ற வேண்டும், மாணவ, மாணவிகளின் நலன் பாதுகாக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கெட்டுப்போன காய்கறிகள்
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி மற்றும் பழங்குடியின நல அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு சமைத்த உணவு மற்றும் கெட்டுப்போன காய்கறிகளால் குழம்பு தயார் செய்து மாணவ, மாணவிகளுக்கு நேற்று காலை பரிமாறப்பட்டதால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை நாமக்கல் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வாசுதேவன், துணை இயக்குனர் பூங்கொடி ஆகியோர் நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொல்லிமலையில் அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சம்பவம் செங்கரை கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.