பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததால் 3½ ஏக்கர் நெற்பயிர் கருகியது


பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததால் 3½ ஏக்கர் நெற்பயிர் கருகியது
x

பூச்சி கொல்லி மருந்து தெளித்ததால் 3½ ஏக்கர் நெற்பயிர் கருகியதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி புகார் அளித்தார்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், கூட்டுறவு இணை பதிவாளர் காந்திநாதன், வேளாண்மை இயக்குனர் அனுசுயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கார்த்திகேயன், தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அதன்படி விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள், அதற்கு அதிகாரிகள் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

நாகராஜன்:- ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி குளத்தை தூர்வாரி கரைகளை சீரமைக்க வேண்டும். சிறுதானிய பயிர்களுக்கு களையெடுக்க ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர்:- சிறப்பு திட்டத்தில் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்

ராமசாமி:- குடகனாறு அணையில் சாலை பணிக்காக செம்மண் வெட்டி எடுப்பதை தடுக்க வேண்டும். ஆறுகளில் குப்பைகளை கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும்.

தென்னரசு:- ஆலம்பாடி பகுதிகளில் ஏற்கனவே பல கல் குவாரிகள் இருப்பதால் புதிதாக குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

ராமசாமி:- கரும்பை விட சீமை கருவேல மரம் அதிக விலைக்கு விற்கிறது. இதனால் விவசாயத்தை விட்டுவிட்டு பலர் வேறுவேலைக்கு செல்கின்றனர். இதற்கிடையே பழனி, தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் யானை, பன்றி ஆகிய வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வனவிலங்குகளை தடுக்க வேண்டும். மேலும் கலெக்டரின் எச்சரிக்கைக்கு பின்னரும் ஒட்டன்சத்திரம் சந்தையில் மாடுகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பழனி வெடிமருந்து தொழிற்சாலை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிய மக்கள் ஆவலாக இருக்கின்றனர்.

நேர்முக உதவியாளர் :- வனவிலங்குகள் விளை பயிர்களை சேதப்படுத்துதல், உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குதல் தொடர்பாக வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

செம்மண் வெட்டி கடத்தல்

காளிதாஸ்:- பழனியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் பலனில்லை. கனிம வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரப்பன்:- குஜிலியம்பாறை பகுதியில் கால்நடைகள் அதிகம் இருப்பதால் கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

தங்கபாண்டியன்:- ராமராஜபுரம் கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது.

இணை பதிவாளர்:- இன்று (நேற்று) மாலைக்குள் அங்கு உரம் அனுப்பி வைக்கப்படும்.

கலெக்டர்:- மாவட்டத்தில் எந்த பகுதியிலும் உரம் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. அதற்கேற்ப வேளாண்மை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

3½ ஏக்கர் நெல் கருகியது

சக்திவேல்:- பழனி ஆண்டிப்பட்டியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததில் 3½ ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட நெல் பயிர்கள் கருகிவிட்டன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட நாய்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

நேர்முக உதவியாளர்:- நெல் பயிர்கள் கருகியதை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேலும் வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விரைவில் கூட்டாய்வு நடத்தப்படுகிறது. அதன்பின்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் கலெக்டர்:- காட்டு பன்றிகளை விரட்டும் வகையில் சத்தம் எழுப்பும் கருவிகள், விளக்குகளை பயன்படுத்தலாம்.

தடுப்பணைகள்

பெருமாள்:- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர் தவறாமல் வருகிறார். ஆனால் இன்றைய கூட்டத்தில் வனத்துறை, கால்நடை துறை அதிகாரிகள் வரவில்லை. மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் சரியான நீர்ப்பாசன திட்டம் இல்லை. சந்தானவர்த்தினி ஆறு உள்பட அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்ட வேண்டும். அடிக்கல் நாட்டியதோடு நின்று போன அய்யனார் அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி குப்பை கிடங்கை மாற்ற வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர்:- மாநகராட்சி குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பாக ஆணையாளர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கருணாகரன்:- ஒட்டன்சத்திரம் சந்தையில் மாடு, ஆடு, கோழிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

நல்லசாமி:- ஒட்டன்சத்திரத்தில் ஆண்டு முழுவதும் தேங்காய் விளைச்சல் இருப்பதால், நிரந்தர கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

நேர்முக உதவியாளர்:- தேங்காய் கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜேந்திரன்:- ஒட்டன்சத்திரம்-திருப்பூர் சாலையில் புதிய மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதை சரிசெய்ய இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.

கலெக்டர்:- சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மார்க்கெட் பகுதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.


Next Story