பீகார் வாலிபர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு


பீகார் வாலிபர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு
x

ரூ.21½ லட்சம் மோசடியில் கைதான பீகார் வாலிபர்கள் 3 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேனி

ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37) இவர் சட்டப்படிப்பு படித்துவிட்டு பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் சமையல் கியாஸ் விற்பனை முகவர் உரிமம் பெறுவது தொடர்பாக இணையதளத்தில் தேடியபோது, ஒரு இணையதள முகவரியில் தனது செல்போன் எண், பெயர் விவரங்களை பதிவு செய்தார். பின்னர், கியாஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர்கள், உரிமம் பெறுவதற்கான கட்டணம் என்று கூறி ரூ.21 லட்சத்து 64 ஆயிரத்து 700-ஐ பாலமுருகனிடம் பெற்று மோசடி செய்தனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர்கள் பீகார் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து இந்த வழக்கில் பீகார் மாநிலம், நவதா மாவட்டம் தால்போஸ்ட் கிராமத்தை சேர்ந்த ரோஷன்குமார் (28). அவருடைய தம்பி ஆசிஷ் என்ற தீபக்குமார் (27), அதே ஊரைச் சேர்ந்த பல்ராம் (20) ஆகிய 3 பேரையும் தேனி சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதற்காக பீகாரில் இருந்து அவர்களை தேனிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் 3 பேரையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அவர்களை தேனி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் கைதான நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாகவும், அந்த கும்பலுக்கு பட்டதாரி வாலிபர் ஒருவர் தலைவனாக செயல்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன. கைதான நபர்களுக்கு மோசடி செய்த பணத்தில் ரூ.1 லட்சத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கமிஷனாக கொடுத்ததாகவும், மற்ற பணத்தை மோசடி கும்பலின் தலைவன் எடுத்துக் கொண்டு தனது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி வருவதாகவும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன்பேரில் அந்த கும்பலின் தலைவன் குறித்தும் தேனி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story