தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி


தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் வீராசாமி (வயது 40). இவர் தற்காலிகமாக கமுதி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில் பேரையூர் ஊராட்சியில் செயலாளராக வேலை செய்துவரும் ரமேஷ் என்பவர் மூலம் அறிமுகமான பரமக்குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி இந்துமதி, பரமக்குடி குருசாமி மகன் சொர்ணகுமார், ஆல்பிரட் பிராங்ளின் ஆகியோர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி உள்ளனர். இதற்காக ரூ.4 லட்சம் பேரம் பேசி அதன் அடிப்படையில் பல்வேறு தேதிகளில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை வீராசாமி கொடுத்தாராம். இந்த பணத்தை பெற்றுக்கொண்டு ரூ.100 பத்திரத்தில் எழுதிக்கொடுத்துள்ளனர். இதன்பின்னர் கூரியர் தபால் மூலமாக போலியான பணிநியமன ஆணையை தயார் செய்து அனுப்பி உள்ளனர். இதுபற்றி கேட்ட போது பணத்தை தராமலும், வேலை வாங்கி கொடுக்காமலும் ஏமாற்றியதோடு மிரட்டினார்களாம். இதுகுறித்து வீராசாமி தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story