2¾ டன் ரேஷன் அரிசி கடத்திய 3 வாலிபர்கள் கைது


2¾ டன் ரேஷன் அரிசி கடத்திய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 22 Jun 2023 9:04 PM GMT (Updated: 23 Jun 2023 10:41 AM GMT)

2¾ டன் ரேஷன் அரிசி கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

திருச்சி

திருச்சி குடமுருட்டி பாலம் வழியாக ரேஷன் அரிசி கடத்திச்செல்வதாக தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கூடுதல் டி.ஜி.பி. காமினி அறிவுரையின் பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் குடமுருட்டி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, அந்தவழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில், மூட்டை மூட்டையாக சுமார் 2¾ டன் ரேஷன் அரிசி கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாகனத்தில் இருந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள், திருச்சி கீழபுலிவார்டு பகுதியை சேர்ந்த பெரியண்ணசாமி (வயது 30), முத்தரசநல்லூரை சேர்ந்த விஜய் (24), பாலசுப்பிரமணியன் (23) என்பதும், திருச்சியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மாட்டுத்தீவனத்துக்காக அவற்றை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், பெரியண்ணசாமி, விஜய், பாலசுப்பிரமணியன் ஆகிய 3 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும், 2¾ டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story