3-ம் முழுமை திட்ட ஆவண தயாரிப்பு பணி தொடக்கம்: அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை சென்னை பெருநகரம் விரிவாக்கம் - அமைச்சர் தகவல்
3-ம் முழுமை திட்ட ஆவண தயாரிப்பு பணி தொடங்கியது. அதன்படி அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் சென்னை பெருநகர பகுதிக்கான 3-ம் முழுமை திட்டம் (2027-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலின் திட்ட தொடக்க பயிலரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.
பொதுமக்கள், பங்குதாரர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட புதிய இணையதளத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்து பேசியதாவது:-
உலக வங்கியின் நிதியில் 3-வது முழுமை திட்டம் செயல்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 2-வது முழுமை திட்டம் வருகிற 2026-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் 2027 முதல் 2046 ஆண்டுக்கான சென்னை மாநகர வளர்ச்சியின் முழுமை திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. அப்பணிகள் நடைபெறும் போது நில ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 3-ம் முழுமை திட்டம் அமையும்.
தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முன்பாக சட்டசபை தொகுதி வாரியாகவும், கிராமங்கள் தோறும் சென்று அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக தடுக்க முடியும். எதிர்காலத்தில் சென்னை மாநகராட்சியில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அரசிடம் நேரடியாகவே கருத்துகளை தெரிவிக்கலாம். 3-ம் முழுமை திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும். அடுத்த 50 ஆண்டு காலத்துக்கு பிறகு என்ன தேவை இருக்கும்? அதை திட்டமிட்டு, அதை அமல்படுத்த இந்த திட்டம் முழுமையாக பயன்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, 'தி.மு.க. ஆட்சியில்தான் 2-வது முழுமை திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 3-வது முழுமை திட்டம் தயாரிக்கும் பணி தொடங்க இருக்கிறது. சாலைகள் இல்லாத பகுதிகளில் முறையாக திட்டமிட்டு சாலைகள் அமைத்து தரவேண்டும். சென்னை தற்போது அரக்கோணம் மற்றும் அச்சரப்பாக்கம், திண்டிவனம் வரை போகிறது. இங்குள்ள ஊராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை கண்டறிந்து பாதுகாக்கப்பட வேண்டும். நீர் நிலைகளையும் பாதுகாக்க தனி கவனம் செலுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என்றார்.
மேயர் பிரியா பேசும்போது, 'நீர்நிலைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், இயற்கை பேரிடர் மேலாண்மையை திறம்பட கையாள்வதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்' என்றார்.
வீட்டு வசதி துறை முதன்மைச் செயலாளர் ஹதேஷ்குமார் மக்வானா பேசும்போது, 'சென்னையை தவிர்த்து ஓசூர் மற்றும் கோவை மாநகரங்களின் திட்ட ஆவணத்துக்கு அரசு அனுமதி கிடைத்துள்ளது. மொத்தம் 20 நகரங்களுக்கு தொலைநோக்கு திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டு வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் வெளியிடப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலும் கட்டிடக்கலை படிப்பு தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது' என்றார்.
நிகழ்ச்சியில் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, மாதவரம் சுதர்சனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா வரவேற்றார். செயல் தலைமை அதிகாரி லட்சுமி நன்றி கூறினார்.
அகலப்படுத்தப்படும் அண்ணா சாலை
அண்ணா சாலையை அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிது. அதேபோல் 10 அல்லது 15 சாலைகள் அகலப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அண்ணா சாலையில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு முன்கூட்டியே இடம் விட்டு கட்ட அறிவுரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. அப்பணிகள் நடைபெறுமம்போது நில ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 3-ம் முழுமை திட்டம் அமையும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.