கூண்டுக்குள் சிக்கிய 4 குரங்குகள்


கூண்டுக்குள் சிக்கிய 4 குரங்குகள்
x

பழனியில் பக்தர்களுக்கு இடையூறு செய்த 4 குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.

திண்டுக்கல்

பழனி மலைக்கோவிலில், சுற்றித்திரியும் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டம், கூட்டமாக வலம் வரும் இந்த குரங்குகளால் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் இருந்து தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை குரங்குகள் பறித்து செல்கின்றன.

இதேபோல் தின்பண்டங்கள், பணப்பை, செல்போன் ஆகியவற்றையும் பக்தர்களிடம் இருந்து குரங்குகள் பிடுங்கி செல்வது தொடர்கதையாகி விட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டூழியங்களால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மலைக்கோவிலில் உள்ள குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக்கருத்தில் கொண்டு, பக்தர்களுக்கு இடையூறு செய்யும் குரங்குகளை வனத்துறையினரின் உதவியுடன் கூண்டு வைத்து பிடிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மலைக்கோவிலில் குரங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. அதில் நேற்று 4 குரங்குகள் சிக்கின. அவற்றை பிடித்த வனத்துறையினர் கொடைக்கானல் வனப்பகுதியில் கொண்டு விட்டனர். மேலும் அங்கு சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்கும் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story