கடலூர் மாவட்டத்தில்மேலும் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க கலெக்டர் வேண்டுகோள்
கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்காவிட்டால், அதில் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தி ஆகி விடுகிறது. இந்த கொசுக்கள் டெங்கு காய்ச்சலை உருவாக்கி வருகிறது.
ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகிற வைரஸ் காய்ச்சல், காய்ச்சல், தலைவலி, கண்களை சுற்றி வலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, உடம்பில் சிவப்பு நிற தடிப்புகள் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இவைகள் பொதுவாக தானாகவே சரியாகிவிடும் என்றாலும் சில சமயங்களில் இளம் வயதினரையும், முதியோர்களையும் அதிக அளவில் தாக்கி இறப்பை உண்டாக்கி விடுகிறது.
மேலும் 4 பேருக்கு பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் இந்த டெங்கு காய்ச்சலால் 12 பேர் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 4 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 5 ஆண்கள், 7 பெண்கள் என 12 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது பற்றி மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நோயை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உடைந்த மண்பானைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகள், வாகன டயர்கள் போன்றவற்றில் தேங்கும் மழை நீரில் உருவாகிறது.
இவ்வகையான கொசுக்கள் பொதுவாக பகல் நேரங்களில் மனிதனை கடிப்பதினால் தன் முழு உணவான ரத்தத்தினை உறிஞ்ச பல நபர்களை கடித்து அதிக நபர்களுக்கு இக்கிருமியை பரப்புகிறது. இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். ஆகவே பொது மக்கள் மழை நீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தால், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.