கார் பட்டறை அதிபர் கொலை வழக்கு: அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


கார் பட்டறை அதிபர் கொலை வழக்கு:  அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை  சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

கார் பட்டறை அதிபர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

சேலம், ஜூலை.13-

கார் பட்டறை அதிபர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கார் பட்டறை அதிபர்

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள மூக்குத்திபாளையம் கிராமம் அய்யனாரப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 32). இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சொந்தமாக கார் பட்டறை நடத்தி வந்தார். இவரை கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி பெத்தான்காடு ஏரி குள்ளரசன் குட்டை பகுதியில் மர்ம கும்பல் ஒன்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது.

இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக மூக்குத்திபாளையம் பெத்தான்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (28), அவருடைய தம்பி விஜயகுமார் (23), ரவிக்குமார் (26), வெங்கடேஷ் (23), ஜீவானந்தம், சபரி, சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காதல் விவகாரத்தில் கொலை

போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட மகேசின் உறவினர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அதே பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ரமேசின் தம்பி விஜயகுமார் என்பவர் காதலிப்பதாக குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் மகேசின் உறவினரை ரமேஷ் தாக்கினார். இதை மகேஷ் தட்டிக்கேட்டதால் அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் விவகாரத்தில் ரமேஷ் உள்பட சிலர் சேர்ந்து மகேசை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் கார் பட்டறை அதிபர் மகேசை கொலை செய்த குற்றத்திற்காக ரமேஷ், அவருடைய தம்பி விஜயகுமார், ரவிக்குமார், வெங்கடேஷ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பு அளித்தார். ஜீவானந்தம், சபரி, சக்திவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story