பிரபல ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சென்னை கோர்ட்டில் சரண்


பிரபல ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சென்னை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 9 Feb 2023 7:30 PM GMT (Updated: 9 Feb 2023 7:30 PM GMT)
சேலம்

அயோத்தியாப்பட்டணம்:-

அயோத்தியாப்பட்டணம் அருகே நடந்த பிரபல ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

ரவுடி கொலை

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளப்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவர் கடந்த 5-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வெள்ளியம்பட்டியில் உள்ள நண்பரை பார்க்க பிரபாகரன் என்பவருடன் சென்றார்.

காட்டூர் மயானம் அருகே அவர்கள் சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து ஆனந்தனை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதுடன் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பிரபாகரன் காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது. இந்த கொலையில் கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

சரண் அடைந்தனர்

மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதன்படி தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் ஆனந்தனின் தம்பி உறவுமுறை கொண்ட ஒருவர் மற்றும் நாமக்கல் மாவட்டம் அத்தனூரை சேர்ந்த ஒருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் எம்.எம்.-8 கோர்ட்டில் குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த அன்பழகன் (42), வீராணத்தை சேர்ந்த சக்திவேல் (35), காட்டூர் அருகே வெள்ளியம்பட்டியை சேர்ந்த நாகலிங்கம் மகன் அஜித்குமார் (25), சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் (36) ஆகியோர் சரண் அடைந்தனர். இதில் அன்பழகன் கொலையுண்ட ஆனந்தனின் சித்தப்பா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story