40 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது


40 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது
x

வேலூர் மாநகராட்சியில் 40 வீடுகளை மழை ெவள்ளம் சூழ்ந்தது. மழைவெள்ளம் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மேயர் சுஜாதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வேலூர்

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் 40 வீடுகளை மழை ெவள்ளம் சூழ்ந்தது. மழைவெள்ளம் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மேயர் சுஜாதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மாங்காய் மண்டி அருகே உள்ள சம்பத் நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதேபோல கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெரு, இந்திராநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவ்வழியாக செல்லும் நிக்கல்சன் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் நீரின் அளவு அதிகரித்ததால் குடியிருப்புக்குள் புகுந்து கழிவுநீருடன் சேர்ந்து மழை நீரும் தெரு முழுவதும் தேங்கி நின்றது. சிலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றது. மேலும் அங்கு தண்ணீரின் அளவு உயராத வண்ணம் மாநகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளை அடுக்கினர்.

கலெக்டர், மேயர் ஆய்வு

சம்பத்நகரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த பகுதியில் தண்ணீர் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் நிக்கல்சன் கால்வாய் பகுதியில் குப்பைகள் தேங்காத வாரும் அதனை தூர்வாரும் பணியினையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் காற்றின் வேகம் குறைவாகவும் மழையின் அளவு குறைவாகவும் உள்ளது. மழை தொடரும் என கூறி இருக்கும் நிலையில் அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மாவட்டம் முழுவதும் 35 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை தெருக்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகவில்லை. இருந்த போதும் முகாம்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்.

வேலூர் மாநகராட்சியில் 6 இடங்கள் மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டு மின் மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 4 மண்டலங்களுக்கு தனித்தனி குழு அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுப்பாட்டு அறை

பின்னர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் மேயர் சுஜாதா கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் திடீர் நகர், கன்சால்பேட்டை, சம்பத் நகர் உள்ளிட்ட இடங்கள் தண்ணீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டு உடனடியாக அங்கு மின் மோட்டார் மூலமாக தண்ணீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள பொதுமக்கள் மழை பாதிப்பு தொடர்பாக வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண் 0416 -2220578 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.




Next Story