பிரபல கொள்ளையனிடம் இருந்து 40 பவுன் நகைகள் மீட்பு


பிரபல கொள்ளையனிடம் இருந்து 40 பவுன் நகைகள் மீட்பு
x

பிரபல கொள்ளையனிடம் இருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டில் 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதேபோல் கண்டோன்மெண்ட், செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஒரு சில வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைந்து பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி மேற்பார்வையில், செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாஜாபேட்டையில் பிரபல கொள்ளையன் மின்னல்மணி போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

40 பவுன் நகைகள் மீட்பு

இதையடுத்து திருச்சியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் சிக்கிய கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது, பிரபல கொள்ளையன் மின்னல்மணி தான் திருச்சியில் பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி இருந்தது தெரியவந்தது. மேலும் மின்னல்மணி சென்னையில் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளைரவியின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மின்னல்மணியை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஜெயலெட்சுமி வீடு உள்பட பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து மின்னல்மணியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற போலீசார், சென்னைக்கு சென்று அவர் கொள்ளையடித்து வைத்திருந்த 40 பவுன் நகைகளை மீட்டனர்.


Next Story