பாலமோரில் 43.6 மில்லி மீட்டர் மழை பதிவு பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2¾ அடி உயர்வு


பாலமோரில் 43.6 மில்லி மீட்டர் மழை பதிவு  பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2¾ அடி உயர்வு
x

குமரி மாவட்டத்தில் ெதாடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக பாலமோரில் 43.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2¾ அடி உயர்ந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ெதாடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக பாலமோரில் 43.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2¾ அடி உயர்ந்தது.

தொடர் மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்வதால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நாகர்கோவில் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. மார்த்தாண்டம், திருவட்டார், பேச்சிப்பாறை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று காலையில் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பாலமோரில் 43.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. மலையோரம் மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 44.56 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1346 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பெருஞ்சாணி அணை

77 அடி ெகாள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 46.05 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 2¾ அடி உயர்ந்து 48.85 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 1320 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.

ெதாடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து எந்தநேரத்திலும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளம்

தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ரப்பர் பால் வெட்டு தொழில், செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அவற்றை விவசாயிகள் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள்.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 31, பெருஞ்சாணி அணை- 38, புத்தன் அணை- 40.2, சிற்றார் 1- 28.4, மாம்பழத்துறையாறு அணை- 6, முக்கடல் அணை- 14, பூதப்பாண்டி- 10.2, கன்னிமார்- 13.2, கொட்டாரம்- 3, நாகர்கோவில்- 2, சுருளக்கோடு- 35.4, தக்கலை- 9, மாம்பழத்துறையாறு- 6, திற்பரப்பு- 36.4, ஆரல்வாய்மொழி- 3, அடையாமடை- 14, முள்ளங்கினாவிளை- 25.4, ஆனைக்கிடங்கு- 7 என பதிவாகி இருந்தது.


Next Story