பிரபல சாராய வியாபாரி கைதுபதுக்கி வைத்த 4,375 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
திருவண்ணாமலையில் பிரபல சாராய வியாபாரி அவரது வீட்டில் ரகசிய அறையில் பதுக்கி வைத்த 4 ஆயிரத்து 375 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலையில் பிரபல சாராய வியாபாரி அவரது வீட்டில் ரகசிய அறையில் பதுக்கி வைத்த 4 ஆயிரத்து 375 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிரபல சாராய வியாபாரி
திருவண்ணாமலை அருகில் உள்ள களஸ்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் மோகன்தாஸ் (வயது 32). பிரபல சாராய வியாபாரியான இவரது வீட்டில் ஆயிரக்கணக்கான லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலிஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மோகன்தாஸின் வீட்டிற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர்.
அந்த சமயத்தில் வீட்டில் இருந்த பூஜை அறையில் சாமி படத்தின் பின்பு ஏதோ ஒரு அடையாளம் இருந்து உள்ளது. இதைக்கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் சாமி படத்தை அகற்றி விட்டு பார்த்தபோது அந்த இடத்தில் துளையிடப்பட்டு அதன் பின்னர் ரகசிய அறை இருநதது. அதேபோல் கழிவறைக்கு அருகில் உள்ள கண்ணாடி பின்னரும் ரகசிய அறை இருந்தது தெரியவந்தது.
2 ரகசிய அறை
இந்த ரகசிய அறைகளில் கேன்களில் மோகன்தாஸ் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தார். இவ்வாறு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 125 கேன்களில் அடங்கிய 4 ஆயிரத்து 375 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து மோகன்தாசை கைது செய்த போலீசார் அவரை திருவண்ணமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 375 லிட்டர் எரிசாராயத்தை நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் திருவண்ணமாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''ரகசிய தகவலின் போில் மோகன்தாஸ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவர் 2 ரகசிய அறையில் கேன்களில் பதுக்கிய 4 ஆயிரத்து 375 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் யார்,எங்கிருந்து எரிசாராயத்தை கொண்டு பதுக்கி வைத்து உள்ளார், இதனை யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து சாராய ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 1,700 வழக்குகள் சாராயம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,200 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுமார் 4 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான எரிசாராயம், 87 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 20 ஆயிரம் லிட்டர் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்ட 35 பேர் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றார்..