புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை குரூப்-4 தேர்வினை 47 ஆயிரத்து 679 பேர் எழுதுகிறார்கள்


புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை குரூப்-4 தேர்வினை 47 ஆயிரத்து 679 பேர் எழுதுகிறார்கள்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் குரூப்-4 தேர்வினை 47 ஆயிரத்து 679 பேர் எழுதுகிறார்கள். தோ்வையொட்டி 25 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் 161 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 186 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 47 ஆயிரத்து 679 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு நடைபெற உள்ள மையங்களில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தேர்வினை கண்காணிக்கும் வகையில் 186 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 59 சுற்றுக்குழு அலுவலர்களும், 25 பறக்கும் படை அலுவலர்களும், 186 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு நிகழ்வுகளை முழுமையாக கண்காணிக்கும் வகையில் 197 வீடியோகிராபர்கள் மூலமாக பதிவு செய்யப்படவுள்ளன.

பஸ் வசதி

தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதை மின்சாரத்துறை உறுதி செய்திடவும், தேர்வு மையங்களுக்கு அருகில் தேர்வு நாளன்று வழக்கமான பஸ் நிறுத்தம் இல்லாவிடினும் தேர்வர்களுக்கு வசதியாக பஸ்களை நிறுத்தி செல்லவும், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்குவதற்கும், இவற்றை கண்காணித்திடவும் போக்குவரத்துத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு எடுத்து சென்று கருவூலத்தில் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுகளை சிறப்பாக நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) கணேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (பிரிவு அலுவலர்) இசக்கிமுத்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story