ஆந்திராவுக்கு கடத்திய 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்
ஆந்திராவுக்கு கடத்திய 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் கைதானார்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் தமிழக மற்றும் ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள தமிழக கிராம பகுதிகளில் அமாவாசையை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். குடியாத்தத்தை அடுத்த பரதராமி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பூசாரி வலசை கிராமம் அருகே நள்ளிரவு கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் அருண் காந்தி, ராஜமாணிக்கம் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பரதராமி நோக்கி வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் சிறுசிறு மூட்டைகளாக 5 டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதை ஆந்திராவுக்கு கடத்திச்செல்வதும தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை, லாரியுடன் பறிமுதல்செய்தனர். மினி லாரி டிரைவர் பேரணாம்பட்டு அடுத்த ஏரி குத்தி கிராமத்தைச் சேர்ந்த அல்லி முத்து மகன் பழனி (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரி, அரிசி மற்றும் லாரி டிரைவர் வேலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.