58,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி


58,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
x

குமரி மாவட்டத்தில் உள்ள 58,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில:

குமரி மாவட்டத்தில் உள்ள 58,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கோமாரி நோய் தடுப்பூசி பணி

குமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி தொடக்க விழா நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து கூறியதாவது:-

கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் இரட்டை குளம்புகள் கொண்ட கலப்பின கால்நடைகளை தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும். இந்தநோய் ஒரு முறை கால்நடைகளைத் தாக்கிவிட்டால் அதைக் குணப்படுத்தி கால்நடைகளை முன்பிருந்த நிலைக்கு முழுமையாகக் கொண்டு வருவது கடினம் ஆகும். இந்தநோயை தடுப்பூசி மூலம் தடுப்பது தான் சிறந்த வழிமுறையாகும்.

21 நாட்கள் முகாம்

அதற்காக இதுவரை தமிழ்நாட்டில் 18 சுற்றுக்கள் கால்நோய் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி சிறப்பாக நடத்தப்பட்டு 2020 -ம் ஆண்டு முதல் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 2 சுற்று நடத்தப்பட்டுள்ளது. தற்போது 3-ம் சுற்றாக நமது மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தகுதியுள்ள மாட்டினங்களுக்கு (பசுக்கள், காளைகள், எருமைகள்) 52 கால்நடை மருத்துவ நிலையங்களில் 53 குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் தொடங்கியுள்ளது. இந்த முகாம் 21-ந் தேதி வரை 21 நாட்கள் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமின் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 58,700 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக கால்நடை மருத்துவர், கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநோய் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கால்நடை வளர்ப்போர் அரசின் இந்த தடுப்பூசி சேவையை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன், துணை இயக்குனர் முருகேசன், உதவி இயக்குனர்கள் சந்திரசேகர், நோபிள், எட்வர்ட் தாமஸ், மகாலிங்கம், பூதலிங்கம், கால்நடை உதவி மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story