கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதுசி.வி.சண்முகம் எம்.பி. குற்றச்சாட்டு
கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது என்று சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். இது பற்றி அறிந்ததும் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், நேற்று நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அ.தி.மு.க. சார்பில் தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார். மேலும் அவர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பணம் கையூட்டு...
விழுப்புரம் மாவட்டத்தில் அபின், கஞ்சா மற்றும் போதை சாக்லெட் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய காவல்துறை தூங்கிக்கொண்டிருக்கிறது. பெருமளவு பணம் கையூட்டு பெற்றுக்கொண்டு, போதையை காவல்துறை ஊக்குவிக்கிறது. தன்னுடைய ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். பாக்கெட் சாராயம் விற்பனை குறித்தும், அதன் வினியோகம் குறித்தும் காவல்துறைக்கு நன்றாக தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.
விரைவில் போராட்டம்
திண்டிவனம் 20-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர்தான் சாராய விற்பனைக்கு காரணம். சில நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டார். அவர், ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். எந்த அமைச்சர் அவரது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பது புரியவில்லை. உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா என்பதும் தெரியவில்லை. அரசே சாராயத்தை விற்கிறது. மதுவை ஊக்குவிக்கிறது. தி.மு.க.வினருக்கு சொந்தமாக 8 சாராய ஆலைகள் உள்ளது. போதையில் தமிழகம் தள்ளாடுகிறது. கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் அ.தி.மு.க. சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், அ.தி.மு.க. நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, முருகன், எசாலம் பன்னீர், மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சரவணகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.