இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற 6 பேர் கைது


இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற 6 பேர் கைது
x

வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு திருட்டுத்தனமாக படகில் தப்பிச்செல்ல முயன்ற 6 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு திருட்டுத்தனமாக படகில் தப்பிச்செல்ல முயன்ற 6 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிர சோதனை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல இருப்பதாக நாகை மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரபூபதி மற்றும் போலீசார் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான விடுதியில், இலங்கைக்கு திருட்டுத்தனமாக செல்ல இருப்பவர்கள் தங்கி இருப்பது தெரிய வந்தது.

அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள்

இதையடுத்து அங்கு உள்ளவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேனுஜன்(வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவர் பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கீழ்ப்புதுப்பாக்கம் வேல்முருகன் தெருவை சேர்ந்த துஷ்யந்தன்(36) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வேளாங்கண்ணி தனியார் விடுதியில் தங்கி இருந்த வேலூர் வாலாஜாபேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன்(32) என்பவரையும் பிடித்தனர்.

இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 6 பேர் கைது

பிடிபட்ட 6 பேரையும் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் திருட்டுத்தனமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாம்களில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டு வேளாங்கண்ணி வந்து அறை எடுத்து தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ.17 லட்சம் பறிமுதல்

மேலும் இலங்கைக்கு திருட்டுத்தனமாக படகில் தப்பி செல்ல செல்வத்துக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.17 லட்சத்தையும், கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story