நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
ஈரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
6 பவுன் சங்கிலி
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி- 3-ஐ சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி மரகதவள்ளி (வயது 65). நேற்று முன்தினம் இவருடைய வீட்டின் அருகில் காந்திஜி வீதியில் உள்ள தனது மகனை பார்க்க சென்றார். பின்னர் இரவு 8.45 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் வந்து கொண்டு இருந்தார்.
அருகில் வந்ததும் அந்த நபர் மரகதவள்ளி கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை வெடுக்கென பறித்தார். இதனால் அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த நபர் அருகில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்த மற்றொரு நபருடன் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
2 பேருக்கு வலைவீச்சு
இதைத்தொடர்ந்து மரகதவள்ளி இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடந்த 23-ந்தேதி 2 பெண்களிடம் 7½ பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துசென்றது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பெண்களை குறித்து வைத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதால் பெண்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.