60 சதவீத ஜல்ஜீவன் திட்டப்பணிகள் முடிவடையாத நிலை


60 சதவீத ஜல்ஜீவன் திட்டப்பணிகள் முடிவடையாத நிலை
x

கடந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 60 சதவீத ஜல்ஜீவன் திட்டப்பணிகள் முடிவடையாதது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


கடந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 60 சதவீத ஜல்ஜீவன் திட்டப்பணிகள் முடிவடையாதது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்ஜீவன் திட்டம்

மத்திய அரசு கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் அருப்புக்கோட்டையில் 17 திட்டப் பணிகளும், காரியாபட்டியில் 9 திட்டப்பணிகளும், நரிக்குடியில் 22 பணிகளும், ராஜபாளையத்தில் 11 பணிகளும், சாத்தூரில் 35 பணிகளும், சிவகாசியில் 6 பணிகளும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 பணிகளும், திருச்சுழியில் 10 பணிகளும், வத்திராயிருப்பில் 16 பணிகளும், வெம்பக்கோட்டையில் 9 பணிகளும் ஆக மொத்தம் 138 பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குடிநீர் பிரச்சினை

இதற்காக ரூ.8 கோடியே 80 லட்சத்து 94 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அடுத்த நிதியாண்டு முடிவடையும் தருவாயிலும் கூட 60 சதவீத பணிகள் அதாவது 81 பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக சாத்தூரில் இன்னும் 28 பணிகளும், அருப்புக்கோட்டையில் 15 பணிகளும், நரிக்குடியில் 12 பணிகளும் முடிவடையாத நிலையில் உள்ளன. மாவட்டத்தில் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ள நிலையில் இத்திட்டம் கிராம மக்களுக்கு குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மிக அத்தியாவசியமாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டத்தில் அடுத்த நிதியாண்டு முடியும் தருவாயிலும் கூட இன்னும் 60 சதவீத பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து சிறப்பு கவனம் செலுத்தி கடந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story