திண்டுக்கல்-வேளாங்கண்ணி இடையே 60 சிறப்பு பஸ்கள்
திண்டுக்கல்-வேளாங்கண்ணி இடையே வருகிற 28-ந்தேதி முதல் 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 29-ந்தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்வதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் செல்வார்கள். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு ஏராளமான மக்கள் செல்வது வழக்கம். இதையொட்டி மக்கள் வேளாங்கண்ணிக்கு சென்று வருவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அந்த வகையில் திண்டுக்கல், வேளாங்கண்ணி இடையே 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. இந்த பஸ்கள் வருகிற 28-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் கூட்டத்தை பொருத்து கூடுதல் பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக திண்டுக்கல், வேளாங்கண்ணியில் ஒரு மேலாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.