தேசிய திறனாய்வு தேர்வை 6,300 மாணவர்கள் எழுதினர்


தேசிய திறனாய்வு தேர்வை 6,300 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 26 Feb 2023 7:30 PM GMT (Updated: 26 Feb 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தா்மபுரி மாவட்டத்தில் 33 மையங்களில் 547 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6,300 மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வை எழுதினர்.

தேசிய திறனாய்வு தேர்வு

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஊரக திறனாய்வு தோ்வு நடத்தி வருகிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இந்த தேர்வை எழுத தகுதி ஆனவர்கள்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 கல்வி உதவித்தொகையாக அரசால் வழங்கப்படும். இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் வரை இந்த உதவித்தொகை கிடைக்கும்.

33 மையங்கள்

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவி பெறும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 33 மையங்களில் தேசிய திறனாய்வு தோ்வு நடைபெற்றது.

இந்தத் தேர்வை தா்மபுரி மாவட்டத்தில் உள்ள 547 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 6,300 மாணவ, மாணவிகள் எழுதினா். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த தேர்வு மையங்களில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.


Next Story