75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபயணம், உணவு கண்காட்சி


தூத்துக்குடியில் சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 12-ந் தேதி நடைபயணம் மற்றும் உணவு கண்காட்சி நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வருகிற 12-ந் தேதி நடைபயணம் மற்றும் உணவு கண்காட்சி நடக்கிறது.

முன்னேற்பாடு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 7½ கிலோ மீட்டர் தூர அளவுக்கு நடைபயணம் மற்றும் உகந்த உணவு கண்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபயணம்

இந்திய தேசத்தின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துடன் இணைந்து வருகிற 12-ந் தேதி 7½ கிலோ மீட்டர் நடைபயணம் மற்றும் உகந்த உணவு கண்காட்சி நடத்தப்படுகிறது. நடைபயணம் காலை 6 மணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மைதானத்தில் தொடங்கி, காமராஜ் கல்லூரியில் நிறைவடைகிறது. நடைபயணத்தில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வரும் 1000 பங்கேற்காளர்களுக்கு"இந்திய தேசத்தின் 75-வது சுதந்திர தினவிழா சின்னம் பொறித்த டி-சர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

75 வகை தோசை

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் உகந்த உணவு கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் டாக்டர் கு.சிவராமன், ஷெப் தாமு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். தமிழாசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், நலமுடன் வாழப் பெரிதும் தேவை, பாரம்பரிய உணவா? பலவகை உணவா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது. மேலும், கண்காட்சியில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், மீன் உள்ளிட்டஉணவுப் பொருட்களின் காட்சிப்படுத்துதலும், விற்பனையும் நடக்கிறது. பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் அதன் ஊட்டச்சத்து விவரங்களுடன் விற்பனைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. அத்துடன், இந்தியதேசத்தின் 75-வது சுதந்திரதினத்தை பிரதிபலிக்கும் வகையில், 75 வகையான தோசைகளும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அரசு துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story