ரூ.8½ லட்சம், 30 பவுன் நகைகள் மீட்பு; ஒருவர் கைது
மதுரை கேட்டரிங் தொழில் அதிபர் வீட்டில் திருடு போன ரூ.8½ லட்சம், 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
மதுரை கேட்டரிங் தொழில் அதிபர் வீட்டில் திருடு போன ரூ.8½ லட்சம், 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நகை, பணம் திருட்டு
மதுரை ஆண்டாள்புரம் வசந்த நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாச சங்கரநாராயணன் (வயது 55). கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறார். கடந்த 2-ம் தேதி திருச்சியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் மறுநாள் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகைகள் மற்றும் 8½ லட்சம் ரூபாய் ெகாள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஜாமீனில் வந்தவருக்கு தொடர்பு
இந்த வழக்கில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்(தெற்கு) சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் தலைமையில் சுப்பிரமணியபுரம் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், அமலநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் வீட்டில் பதிவான கைரேகை மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கடந்த மாதம் 26-ந் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வந்த ஆண்டாள்புரத்தை சேர்ந்த கணேசன்(22) மற்றும் எல்லீஸ்நகர் வைத்தியநாதபுரம் பாண்டியராஜன் ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மாப்பாளையம் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த பாண்டியராஜனை போலீசார் கைது செய்தனர்.
நகை, பணம் மீட்பு
அதில் கணேசனுடன் சேர்ந்து அந்த வீட்டில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் நகை, பணத்தை தனது தாயார் செல்வி, தங்கை அனுசியாவிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். உடனே போலீசார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த 30 பவுன் நகை, 8½ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கணேசனை தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் 24 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை கைது செய்து நகை, பணத்தை மீட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டினார்.
பின்னர் அவர் கூறும் போது, திருட்டு வழக்கில் கண்காணிப்பு கேமரா மற்றும் கைரேகையை வைத்து நகை, பணத்தை திருடியது கணேசன் தான் என்பதை உறுதி செய்தோம். மேலும் அவன் எப்போது நகையை திருடினாலும் அதனை விற்பதற்கு பாண்டிராஜனின் தாயார், தங்கையிடம் தான் கொடுப்பது வழக்கம்.
வலைவீச்சு
திருட்டு நகைகளை வாங்கி விற்றது தொடர்பாக அவரது தாயார் செல்வி மீது 6 வழக்குகளும், அனுசியா மீது 3 வழக்குகள் உள்ளன. கணேசன் மீது மொத்தம் 13 வழக்குகள் உள்ளன. கணேசன் செல்போனை பயன்படுத்துவது கிடையாது. அதன் மூலம் நாம் சிக்குவோம் என்று தெரிந்து வழியில் செல்பவர்களிடம் போனை வாங்கி தான் பேசுவான். திருட்டு போன வீட்டில் அவன் அதிகாலை 3 மணிக்கு அவன் வந்து சென்றது தெரியவந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.