வேப்பிலை ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம்: ரூ.82 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் கார்மேகம் வழங்கினார்


வேப்பிலை ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம்:  ரூ.82 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்  கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
x

வேப்பிலை ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில் 356 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்

சேலம்,

மக்கள் சந்திப்பு முகாம்

காடையாம்பட்டி அருகே வேப்பிலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் நேற்று மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு வேப்பிலை ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர், ராஜகணபதி, காமராஜ்புரம், அண்ணாநகர், செக்காரப்பட்டி குறவன் காலனி, செக்காரப்பட்டி காட்டுவளவு, எட்டால்காடு, கொல்லன்குட்டை, வே.மேட்டூர் உள்பட 26 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அனைத்து துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

அடிப்படை வசதிகள்

ஒரு நாள் முழுவதும் இங்கு முகாமிடுவதால் அலுவலர்களுக்கு இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிராம மக்களுக்கு சென்று சேருகிறதா? எனவும் அறிந்து கொள்ள முடியும்.

கிராமங்களில் குடிநீர், சாலை வசதிகள், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக வருகை தந்து மனுக்களாக வழங்கலாம்.

வேப்பிலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது அதன் சாத்தியக் கூறுகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் பிரிவு, வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 356 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மணி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மயில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் தமிழரசி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, காடையாம்பட்டி தாசில்தார் அருள் பிரகாஷ், காடையாம்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் மாரியம்மாள் ரவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் வேடியப்பன், வேப்பிலை ஊராட்சி மன்றத்தலைவர் கமலா ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story