சென்னையில் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை


சென்னையில் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை
x

முதல்கட்டமாக சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன் தக்காளி விலையேற்றம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி வருமாறு:-

தக்காளியின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், கோவையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்,

திருச்சியில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் ஒரு நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை, மதுரையில் செயல்பட்டு வரும் 4 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் தூத்துக்குடி, திருவண்ணாமலை, நெல்லை, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தலா ஒரு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ.60 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று முதல்....

இந்நிலையில் தொடர்ந்து பக்கத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தக்காளியின் வரத்து குறைவாக உள்ள காரணத்தினால் வெளிச்சந்தைகளில் தக்காளியின் விலை உயர்வு காணப்படுகிறது. மொத்த விற்பனை வணிகர்களிடமும் இந்த விலை உயர்வு குறித்து பேசினோம். ஒரு வாரம் இந்த விலை நீடிக்கும் என்று தெரிவித்தனர்.

கூட்டுறவுத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் இணைந்து, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் தக்காளி பயிர் செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து, அங்கிருந்து தக்காளி கொள்முதல் செய்து இந்த விலை ஏற்றத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விலை ஏற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் தடுக்க, ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் முதல்கட்டமாக, வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும், மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகளிலும் என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும்.

கட்டுப்பாட்டுக்குள்....

மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விரிவுபடுத்தப்படும்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யாவிட்டாலும் குறிப்பிட்ட கடைகளில் விற்பனை செய்வோம்.

குறுகிய காலத்திற்குள் தக்காளி விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. வரும் காலத்தில் வேளாண் விற்பனை மையம் மூலம் தக்காளியை கொள்முதல் செய்யவும், நெல், கரும்புபோல தக்காளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த தக்காளிகளில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 75 சதவீதமும், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 25 சதவீதமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூடுதல் பதிவாளர் விஜயராணி உள்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story