மாணவிகளுக்கு ரூ.8.87 கோடி உதவித்தொகை


மாணவிகளுக்கு ரூ.8.87 கோடி உதவித்தொகை
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 7,396 மாணவிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு உயர்கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.8.87 கோடி மதிப்பில்

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஆகஸ்டு மாதம் முதல் 56 கல்லூரிகளை சார்ந்த 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் 4,174 மாணவிகளுக்கு ரூ.5 கோடியே 88 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக முதலாமாண்டு மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 72 கல்லூரிகளில் படிக்கும் 3,222 மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 86 லட்சத்து 64 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் தங்களது லட்சிய கனவை எய்திட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story