ஒரேநாளில் குழந்தைகள் உள்பட 9 பேருக்கு டெங்கு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரேநாளில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை காரணமாக பருவகால காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. இவர்களில் பலருக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுசுகாதார ஆய்வு மையம் உள்ளது என்றும் இந்த ஆய்வகத்தில் பரிசோதனை செய்தால்தான் டெங்கு காய்ச்சல் என உறுதி செய்ய முடியும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த ஒரு வயது குழந்தை, ராமநாதபுரம் வசந்தநகர் 5 வயது சிறுமி, வளையர்வாடி 2 வயது குழந்தை, மாந்தோப்பு மகாசக்திநகர் 2 வயது குழந்தை உள்பட 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.