திண்டிவனம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 9 பேர் படுகாயம்


திண்டிவனம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 9 பேர் படுகாயம் அடைந்தனா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் துளசி மனைவி பார்வதி (வயது 48). இவர் தனது மகன் மணி(29), உறவினர்கள் மோகனா(35), இவரது குழந்தைகள் தர்ஷன்(8), ரிஷிவந்த்(6), சஞ்சனா(5), கலைச்செல்வி, இவரது மகன்கள் சந்தோஷ்(14), நவீன்குமார்(11) ஆகியோருடன் ஒரு காரில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு நேற்று காலை அனைவரும் அதே காரில் சென்னைக்கு புறப்பட்டனர். 7.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனை போலீஸ் நிலையம் எதிரே திண்டிவனம்-திருவண்ணாமலை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் அந்த கார் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் சென்று, அங்கிருந்த ஒரு சுவரில் மோதி நின்றது.

9 பேர் படுகாயம்

இதில் பார்வதி உள்ளிட்ட 9 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இதை அறிந்த ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story