99 சதவீத மின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது


99 சதவீத மின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
x

99 சதவீத மின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்

கரூர்,

புகைப்பட கண்காட்சி

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு அரசு துறைகளில் திட்டங்கள் தொடர்புடைய கண்காட்சி அரங்குகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டு தமிழக அரசின் கரூர் மாவட்டம் தொடர்பான ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், எம்.எல்.ஏக்கள். மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர்.கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பொது சுகாதாரத்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு, தோட்டக்கலை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தை வளர்ச்சி துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, காவல்துறை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி இருந்தனர்.

தமிழக அரசின் சாதனைகள்

பின்னர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் 20 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், காது கேளாத, வாய்பேச முடியாத 6 பேருக்கு பிரத்யேக தொலைபேசிகளையும் அமைச்சர் வழங்கினார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன எல்இடி வீடியோ வாகனத்தில் ஒளிபரப்பப்பட்ட தமிழக அரசின் சாதனைகளை பார்வையிட்டார்.

பேட்டி

பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- நிலக்கரியை பொருத்தவரை 6 நாட்களுக்கு மேல் கையிருப்பு உள்ளது. மின் வினியோகம் சீராக நடைபெற்று வருகிறது. மின்னகத்திற்கு இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் கூறப்பட்டு உள்ளது. இரவு பகல் என்று 24 மணி நேரமும் மின்துறை ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். 99 சதவீத மின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புகார் தெரிவிக்கப்பட்டால் கூட அது உடனடியாக சரி செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பாராட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 4 ஆயிரத்து 320 மெகாவாட். அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தி கூடுதலாக 6 ஆயிரத்து 220 மெகாவாட் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மொத்தம் 3 கோடியே 24 லட்சம் மின் இணைப்புகள் உள்ளது. சர்வீஸ் என்ணை சொல்லி புகார் தெரிவித்தால் புகார்களை உடனடியாக சரி செய்ய வசதியாக இருக்கும் என்றார்.

நொய்யல்

புகழூர் நகராட்சி வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானாவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேலாயுதம்பாளையம்- நொய்யல் நெடுஞ்சாலையில் கந்தம்பாளையம் வரை தார் சாலை விரிவாக்கம் செய்து இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்களை அகற்றி புதிதாக தடுப்பு சுவர்கள் கட்டும் பணிக்காக ரூ.9 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

புகழூர் நகராட்சித்தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி கமிஷனர் கனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கண்ட பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் புகழூர் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன், நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story